பிளவுப்பட்ட தேசியவாத காங்கிரசில் குழப்பம்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார் சரத்பவார் - பா.ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதாக அஜித்பவார் தரப்பு அறிவிப்பு
தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டு உள்ள நிலையில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் இன்று பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல பா.ஜனதா கூட்டணி கூட்டத்தில் அஜித்பவார் கலந்து கொள்கிறார்.
மும்பை,
தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டு உள்ள நிலையில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் இன்று பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல பா.ஜனதா கூட்டணி கூட்டத்தில் அஜித்பவார் கலந்து கொள்கிறார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். கடந்த மாதம் 23-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்துகொண்டார். எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நேற்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடங்கியது. தேசியவாத காங்கிரஸ் 2 ஆக உடைந்து உள்ள நிலையில், அந்த கட்சியின் தலைவர் சரத்பவார் கூட்டத்தில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது.
சரத்பவார் பங்கேற்பார்
இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொள்வார் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இந்த தகவல் அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் தேசியவாத காங்கிரசை பிளவுப்படுத்திய மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார், சரத்பவாரை சந்தித்து பேசினார். அவருடன் 15 எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்று இருந்தனர். அப்போது கட்சியில் ஒன்றிணைந்து செயல்ட வேண்டும் என்று அவர்கள் சரத்பவாரை கேட்டுக்கொண்டனர். 2-வது முறையாக இந்த சமரச முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
சமரச முயற்சி தோல்வி
ஆனால் சரத்பவாரை சமரசம் செய்யும் முயற்சியில் எதிர்ப்பு அணியினர் மீண்டும் தோல்வியை சந்தித்து இருப்பதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரஸ்டோ கூறினார். மற்றொரு செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், "இங்கு என்ன நடந்தாலும் சரத்பவார் இன்று பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்" என்றார். பா.ஜனதா கூட்டத்தில் அஜித்பவார் இதற்கிடையே சரத்பவாரை சந்தித்து விட்டு வெளியே வந்த அஜித்பவார் ஆதரவு அணி தலைவர் பிரபுல் படேல் எம்.பி. கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சரத்பவாரிடம் கோரிக்கை வைத்தோம். டெல்லியில் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) கூட்டத்தில் நானும், அஜித் பவாரும் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார். சரத்பவார் தரப்பினர் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்திலும், அஜித்பவார் தரப்பினர் டெல்லியில் நடைபெறும் பா.ஜனதா கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க முடிவு செய்து இருப்பது தேசியவாத காங்கிரசில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.