நவிமும்பையில் வாலிபரிடம் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - 4 பேருக்கு வலைவீச்சு
நவிமும்பையில் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
தானே,
நவிமும்பையில் உள்ள கட்சோலியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆன்லைனில் வேலை தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக 4 பேர் தொடர்பு கொண்டனர். அவர்கள், வாலிபரிடம் தங்களிடம் பணம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதுடன், ஆன்லைன் வேலையும் தங்கள் மூலமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அவர்களின் ஆசை வார்த்தைகளில் விழுந்த வாலிபர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அந்த நபர்கள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.20 லட்சத்து 22 ஆயிரம் வரை முதலீடு செய்தார். மேலும் வாலிபர், ஆன்லைன் மூலமாக அந்த நபர்கள் கொடுத்த வேலையையும் செய்து கொடுத்தார். செய்த வேலைக்கான தொகையை வாலிபர் கேட்டபோது அந்த நபர்கள் மழுப்பலான பதிலை கொடுத்தனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பேர் மீதும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.