சந்திரகாந்த் பாட்டீல் நீக்கம்; புனே மாவட்ட பொறுப்பு மந்திரியானார், அஜித்பவார்
புனே மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு அஜித்பவார் நியமிக்கப்பட்டார்.
மும்பை,
புனே மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு அஜித்பவார் நியமிக்கப்பட்டார்.
8 பேருக்கு மந்திரி பதவி
மராட்டியத்தில் ஆளும் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் இணைந்தனர். அரசில் இணைந்த அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும், 8 பேருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. இதன்மூலமாக மந்திரிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று 12 மாவட்ட பொறுப்பு மந்திரிகளின் திருத்தப்பட்ட பட்டியலை முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டது. இதன்மூலம் அஜித்பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 மந்திரிகளில் 7 பேர் பல்வேறு மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புனே பொறுப்பு மந்திரி
குறிப்பாக புனே மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஜித்பவார் அந்த மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்சே பாட்டீல், ஹசன் முஷ்ரிப் மற்றும் தனஞ்செய் முண்டே முறையே புல்தானா, கோலாப்பூர் மற்றும் பீட் மாவட்டத்தின் பொறுப்பு மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அஜித்பவார் அணியை சேர்ந்த சஞ்சய் பண்சோர், பாபா அத்ரம் மற்றும் அனில் பாட்டீல் ஆகியோர் முறையே பர்பானி, கோண்டியா மற்றும் நந்துர்பர் மாவட்டங்களின் பொறுப்பு மந்திரியாகினர்.
பா.ஜனதா மந்திரிகள்
பா.ஜனதா கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், விஜய் குமார் காவித், ராதாகிருஷ்ண விகேபாட்டீல் ஆகியோர் முறையே வார்தா, பண்டாரா மற்றும் அகோலா மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வார்தா, அகோலா, பண்டாரா மற்றும் அமராவதி மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பொறுப்பு மந்திரி பதவி வகிப்பவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட விவகாரங்களை நேரடியாக கவனித்து கொள்வார்கள் என்பது கவனிக்கத்தக்கது. நேற்று முன்தினம் முதல்-மந்திரி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தை அஜித்பவார் புறக்கணித்த நிலையில், இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.