கர்பா நடன நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்தவருக்கு வலைவீச்சு
கர்பா நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை விற்று ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
கர்பா நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை விற்று ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கர்பா நிகழ்ச்சி
நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை போரிவிலியில் பிரபல பாடகியின் கர்பா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண காந்திவிலியை சேர்ந்த ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைனில் தேடியபோது, நிகழ்ச்சியின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக அறிவித்து இருந்த விபுல் ஷா என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, விபுல் ஷா ரூ.4 ஆயிரத்து 500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை வெறும் ரூ.3 ஆயிரத்து 300-க்கு தருவதாக தெரிவித்தார். இதன்பேரில் 100-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை அவரிடம் அவர் முன்பதிவு செய்தார்.
போலி டிக்கெட்
மேலும் அதற்கான முன்பணத்தை விபுல் ஷாவிடம் செலுத்தினார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை யோகி நகர் பகுதிக்கு வந்து பெற்று செல்லுமாறு விபுல் ஷா அவரிடம் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்றபோது, விபுல் ஷா வராததால் செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் விபுல் ஷா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் விபுல் ஷா போலி டிக்கெட்டுகளை கொடுத்து இதே பாணியில் மேலும் 156 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் வரையில் பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.