எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது- அரசு அறிவிப்பு
எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.
மும்பை,
எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஓய்வூதிய திட்டம் ரத்து
1975-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு (எமர்ஜென்சி) எதிராக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்களுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1975-ம் ஆண்டு முதல் 1977 வரை அவசர நிலை பிரகடனம் காரணமாக ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 வரை ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டது. ஒருமாதம் வரை ஜெயிலில் இருந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 3 மாதத்திற்கு மேல் ஜெயிலில் இருந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கொரோனா பரவலை அடுத்து கடந்த 2020-ல் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு அவசர நிலை பிரகடனம் காரணமாக ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தது.
மீண்டும் அறிமுகம்
இந்தநிலையில் ஏக்நாத்ஷிண்டே - பா.ஜனதா அரசு மாநிலத்தில் மீண்டும் அவசரநிலை பிரகடன ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்.யை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். எனது தந்தை ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அனைத்து தரப்பினரின் போராட்டத்தால் தான் மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது.
கடந்த மகாவிகாஸ் ஆட்சி அவசரநிலை பிரகடனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கலாம்" என்றார்.