கைதான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்நரேஷ் கோயல் சிறையில் அடைப்பு

வங்கி கடன் மோசடி வழக்கில் கைதான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை,
வங்கி கடன் மோசடி வழக்கில் கைதான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வங்கி கடன் மோசடி
கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கடந்த 1-ந் தேதி கைது செய்தது. அவரது அமலாக்கத்துறை காவல் முடிந்ததை அடுத்து நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அவரை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதையடுத்து கோர்ட்டு அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
சிறையில் அடைப்பு
விசாரணையின்போது நரேஷ் கோயல் தான் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுவதால் குடும்ப டாக்டர், சிறப்பு ஆலோசனை டாக்டர் மற்றும் தனிப்பட்ட டாக்டரின் தினசரி மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டும் இன்றி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தினசரி அடிப்படையில் பொருத்தமான படுக்கையை அனுமதிக்க வேண்டும். வீட்டு உணவை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நரேஷ் கோயலின் இந்த கோரிக்கை மீது அரசு தரப்பு பதிலளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவின் பேரில் நரேஷ் கோயல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.