ஓஷிவாராவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ; 14 பேர் மீட்பு;
ஓஷிவாராவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருந்த 14 பேரை மீட்டனர். தீயை அணைக்க முயன்ற 3 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
ஓஷிவாராவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருந்த 14 பேரை மீட்டனர். தீயை அணைக்க முயன்ற 3 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
14 பேர் மீட்பு
மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையம் அருகே ஹிராபண்ணா என்ற 3 மாடி கொண்ட வணிகவளாகம் உள்ளது. நேற்று மதியம் 3.10 மணி அளவில் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 வாகனங்கள், 10 ஜெட் டேங்கர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். மாலில் உள்ள உடற்பயிற்சி கூடம் மற்றும் மொட்டை மாடியில் இருந்த 9 பேர், படிக்கட்டில் சிக்கி இருந்த 3 பேர் என சேர்த்து மொத்தம் 14 பேரை மீட்டனர்.
3 வீரர்களுக்கு சிகிச்சை
பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தீயணைப்பு படையை சேர்ந்த சந்தீப் பாட்டீல், ராஜூ உத்தம், யோகேஷ் ஆகிய 3 வீரர்களுக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டது. அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மின்வயரில் பற்றிய தீ அங்கிருந்த 12 கடைகளில் பரவி எரிய தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கருவிகளுடன் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3.40 மணி அளவில் அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.