மாநில மின் வினியோக நிறுவனத்துக்கு ரூ39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு


மாநில மின் வினியோக நிறுவனத்துக்கு ரூ39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
x

மாநில மின்சார வினியோக நிறுவனத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

தானே,

மாநில மின்சார வினியோக நிறுவனத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

நிதி ஒதுக்கீடு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தானே மாவட்டத்தில் உள்ள முர்பாட் தாலுகா ஓஜிவாலே பகுதியில் நடைபெற்ற உர்ஜா மகோத்சவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"மராட்டிய மாநில மின்சார வினியோக நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பிரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்காகவும் ரூ. 39 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இதே நோக்கத்திற்காக மும்பை மாநகராட்சி மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு நிறுவனத்திற்கு(பெஸ்ட்) ரூ. 3 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் மாநிலத்தில் உள்ள 1 கோடியே 66 லட்சம் மின் நுகர்வோர் பயன் அடைவார்கள்.

குடிமக்களுக்கு மின்சாரம் தடையின்றி மற்றும் சீராக வழங்க மராட்டிய மின்சார வினியோக நிறுவனம் மற்றும் பெஸ்ட் நிறுவனத்துக்கு போதுமான நிதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

படிப்படியாக ஒதுக்கீடு

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி கபில் பாட்டீல் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளில் மின்துறையால் பல புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட வினியோக துறை திட்டத்தின் கீழ் ரூ.39 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை மாநிலத்திற்கு படிப்படியாக வழங்கப்படும்.

திட்டமிட்டபடி பணிகள் முடிந்தால் இந்த தொகை மானியமாக வழங்கப்படும். இல்லை எனில் திரும்பி செலுத்த வேண்டிய கடனாக மாற்றப்படும். மாநில மின் வினியோக துறை பணிகளை கவனமாகவும், திறம்படவும் செய்யவேண்டும்" என்றார்.


Next Story