கோட்சேவின் சந்ததி அதிகரித்து இருப்பது பற்றியும் பட்னாவிஸ் பேச வேண்டும்- இம்தியாஸ் ஜலீல் எம்.பி. கூறுகிறார்

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோட்சேவின் சந்ததி அதிகரித்து இருப்பது பற்றியும் பேச வேண்டும் என்று இம்தியாஸ் ஜலீல் எம்.பி. கூறியுள்ளார்
அவுரங்காபாத்,
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோட்சேவின் சந்ததி அதிகரித்து இருப்பது பற்றியும் பேச வேண்டும் என்று இம்தியாஸ் ஜலீல் எம்.பி. கூறியுள்ளார்
சகித்துக்கொள்ள முடியாது
அவுரங்காபாத்தில் உள்ள சங்கம்நேர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது சிலர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் புகைப்படத்தை பயன்படுத்தினர். இதுகுறித்து பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "இதுபோன்ற செயல்களை மராட்டிய மாநிலத்தில் சகித்துக்கொள்ள முடியாது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் மாநிலத்தில் அவுரங்கசீப்பின் சந்ததிகள் பெருகி விட்டனர் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்.ஐ.ஏம். கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் நேற்று கூறியதாவது:-
சாகு மகாராஜா பங்களிப்பு
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அறிக்கையை நான் கேட்டேன். அவர் மாநிலத்தின் உள்துறை மந்திரியாக உள்ளார். முழு காவல்துறையும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவுரங்கசீப்பின் சந்ததிகள் எங்கிருந்து நமது மாநிலத்திற்குள் வந்தார்கள்.
அப்படியே இருந்தாலும், தற்போது கோட்சேவின் சந்ததிகளின் எண்ணிக்கையும் வளர்ந்திருக்கிறது. அதுபற்றியும் அவர் பேச வேண்டும். கோலாப்பூரில் தெருக்களில் இறங்கி கற்களை வீசி தாக்கியவர்களுக்கு 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதியும், கோலாப்பூர் ஆட்சியாளருமான சத்ரபதி சாகு மகாராஜாவின் பங்களிப்பு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இங்குள்ள சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவில்லை என்றால், கர்நாடகாவில் தங்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கும் ஏற்படும் என்று மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






