நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் எனது குழந்தையை இழந்தேன்; தந்தை உருக்கம்
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்த சம்பவத்திற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என தந்தை உருக்கமாக கூறினார்.
மும்பை,
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்த சம்பவத்திற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என தந்தை உருக்கமாக கூறினார்.
31 நோயாளிகள் பலி
நாந்தெட் மாவட்டத்தில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி முதல் 48 மணி நேரத்தில் 31 நோயாளிகள் இறந்தனர். இதில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்கும். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தனது குழந்தையை இழந்த நாகேஷ் சொலங்கே என்பவரும் ஒருவர். இவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் நாந்தெட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது குழந்தையும், தாயையும் நாந்தெட் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி இருந்தார். இவர் தனது குழந்தையின் இறப்புக்கு ஆஸ்பத்திரி மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து நாகேஷ் சொலங்கே கூறியதாவது:-
நலமாக இருந்த குழந்தை
தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் எனது குழந்தை நலமாக இருப்பதாக கூறினர். ஆனால் நான்கு அல்லது 5 நாட்களுக்கு கண்ணாடி பெட்டியில் வெதுவெதுப்பாக வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஏற்கனவே மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் செலவழித்திருந்தேன். குழந்தையின் மேல் சிகிச்சைக்காக பெரிய தொகை செலவு செய்ய என்னால் முடியவில்லை. இதனால் நாங்கள் நாந்தெட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். குழந்தை 30-ந்தேதி மாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. மேலும் டாக்டர்கள் கூறிய மருந்துகளை ஒரு மருந்து கடையில் இருந்து வாங்கி ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தேன்.
சோக செய்தி
1-ந் தேதி அதிகாலை 2 மணி வரை குழந்தை நன்றாக இருந்தது. பின்னர் அதிகாலை 4 மணி அளவில் வேறொரு பெரிய எந்திரத்திற்கு குழந்தையை மாற்றுவதாக மருத்துவர்கள் கூறினர். வெளியே காத்திருந்த எங்களிடம் இதற்காக டாக்டர்கள் கையெழுத்து பெற்றனர். பிறகு 10 முதல் 15 நிமிடத்தில் எனது குழந்தை இறந்துவிட்டது. எனது குழந்தைகளை தவிர மற்ற 2 குழந்தைகளும், ஒரு இரட்டை குழந்தையும் இறந்துவிட்டனர் என்ற சோக செய்தியை என்னிடம் தெரிவித்தனர். ஒரே நாளில் எப்படி 12 குழந்தைகள் இறக்க முடியும்? ஒன்று அந்த எந்திரம் வேலை செய்திருக்காது அல்லது மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே இப்படி நடக்க முடியும். ஆஸ்பத்திரி டீனும் இதில் கவனம் செலுத்தவில்லை.
ஏமாற்றமே மிஞ்சியது
குழந்தைகளுக்காக 9 மாதங்கள் காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அறுவை சிகிச்சையால் எனது மனைவி நிரந்தரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். நான் என் குழந்தையை இழந்தேன், என் பணத்தை இழந்தேன். பணம் இல்லாத காரணத்தால் நாங்கள் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து இங்கு வந்தோம். டாக்டர் அலட்சியத்தால் தான் இது நடந்தது. ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லை. உள்ளே சென்று எங்கள் குழந்தையை பார்க்க கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.