பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை
மும்பை சாக்கிநாக்காவில் பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை தின்தோஷி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மும்பை சாக்கிநாக்காவில் பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை தின்தோஷி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கற்பழிப்பு
மும்பையை சேர்ந்தவர் மோகன் சவுகான் (வயது 45). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாக்கிநாக்கா பகுதியில் தனியாக நின்றுகொண்டிருந்த 34 வயது பெண்ணை கடத்தி, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டெம்போவில் வைத்து மிரட்டி கற்பழித்தார்.
பின்னர் அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை குத்தி கொடுமை படுத்தினார். இந்தநிலையில் அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்த பெண் அதிக ரத்தபோக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி பலியானார்.
மன்னிப்பு வழங்க வேண்டும்
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மோகன் சவுகானை கைது செய்த போலீசார் தின்தோஷி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில் மோகன் சவுகான் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.
மோகன் சவுகானின் வக்கீல், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரினார். இந்த வழக்கை நிர்பாயா கூட்டு பலாத்கார வழக்குடன் ஒப்பிட முடியாது. மரண தண்டனை விதிக்க அரிதான வழக்கு அல்ல. அவர் திருந்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வாதாடினார்.
அரிதான வழக்கு
அதே சமயம் அரசு தரப்பு வக்கீல், குற்றவாளிக்கு எதிராக அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்குமாறு வாதிட்டார். அவர், "இது மிகவும் தீவிரமான குற்றம். இரவு தனியாக இருந்த ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் சம்பவம், மும்பை போன்ற பெருநகரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே இந்த வழக்கு அரிதிலும், அரிதான வழக்கிற்கு முற்றிலும் பொருத்தி போகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகப்பட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்றார்.
பரபரப்பு தீர்ப்பு
இருதரப்பு வாதம் நிறவைு பெற்றதை அடுத்து, நீதிபதி எச்.சி. ஷிண்டே நேற்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றவாளி மோகன் சவுகானுக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
குற்றத்தின் உண்மை தன்மை, குற்ற சூழ்நிலைகள், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் ஒட்டுமொத்த நடத்தை இவை அனைத்தையும் வைத்து பாக்கும் போது மோகன் சவுகான் அதிகபட்ச தண்டனை விதிக்க தகுதியானவர் என தெரியவருகிறது.
கருணை காட்ட முடியாது
பெண்ணுக்கு கொடிய, அபாயகரமான காயங்களை ஏற்படுத்தி கொன்றதை பார்க்கும்போது, இந்த வழக்கு, எந்த சந்தேகமும் இல்லாமல், "அரிதிலும் அரிதான" வகைக்குள் வருகிறது. இந்த சம்பவம் மனிதாபிமானமற்றது மற்றும் அதைப் பற்றி யோசித்தாலே உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தின் விஷயத்தில் மெத்தனம் அல்லது கருணை காட்டுவது நீதியை கேலி செய்யும் செயலாகும்.
இவருக்கு மரண தண்டனையை தவிர வேறு எந்த தண்டனையும் வழங்குவது சமுகத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.