மின்சார ரெயில் தடம் புரண்டது; ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை,
மும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடம் புரண்டது
மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனை நோக்கி ஸ்லோ வழித்தடத்தில் நேற்று காலை 11.30 மணி அளவில் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பணிமனைக்குள் நுழையும் தருவாயில் அந்த ரெயில் திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. சத்தம் கேட்ட மோட்டார் மேன் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். ரெயில் தடம் புரண்டதன் காரணமாக ஸ்லோ வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் விரைவு வழித்தடத்திற்கு திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் விரைந்து வந்தனர். சுமார் 40 நிமிட போராட்டத்துக்கு பிறகு அந்த ரெயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர். பின்னர் அந்த ரெயில் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில் போக்குவரத்தும் சீரானது.
யாருக்கும் பாதிப்பு இல்லை
இதுபற்றி மேற்கு ரெயில்வே சீனியர் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், "பணிமனைக்கு சென்ற நேரத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டது. எனவே அதில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை" என்றார். இருப்பினும் விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தாதர் ரெயில் நிலையத்தில் நின்ற பயணி ஒருவர் கூறுகையில், "நான் இங்கு 20 நிமிடங்களாக நிற்கிறேன். ரெயில் எதுவும் வரவில்லை. இது தொடர்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை" என்று குற்றம்சாட்டினார். கடந்த சனிக்கிழமை ராய்காட் மாவட்டம் பன்வெல்-வசாய் வழித்தடத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. தற்போது மின்சார ரெயில் தடம் புரண்டதால், மும்பை பகுதியில் ஒரே வாரத்தில் 2 ரெயில்கள் தடம் புரண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.