பாதாள சாக்கடை விபத்துகளை தடுக்க எளிமையான வழிமுறைகளை கண்டறியுங்கள் மும்பை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

திறந்திருக்கும் பாதாள சாக்கடைகள் மூலம் விபத்துகளை தடுக்க எளிமையான, தற்காலிக வழிமுறைகளை கண்டறியுமாறு மும்பை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
திறந்திருக்கும் பாதாள சாக்கடைகள் மூலம் விபத்துகளை தடுக்க எளிமையான, தற்காலிக வழிமுறைகளை கண்டறியுமாறு மும்பை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்
மும்பையில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும். மோசமான சாலைகள் மற்றும் குண்டும், குழிகள் குறித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு சீரான வழிமுறையை உருவாக்கவேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வக்கீல் ருஜு தாக்கர் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த விசாரணையின் போது திறந்திருக்கும் பாதாள சாக்கடைகள் குறித்த மற்றொரு மனுவை ருஜு தாக்கர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் மற்றும் நீதிபதி அர்ப் டாக்டர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
பாதுகாப்பு கிரில்
இந்த விசாரணையின்போது ஒவ்வொரு பாதாள சாக்கடையின் மூடி பகுதியிலும் ஆட்களோ அல்லது விலங்குகளோ விழாமல் இருக்க இரும்பு கிரில்களை ஏன் நிறுவ கூடாது என கோர்ட்டு மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதற்கு நேற்று பதில் அளித்த மும்பை மாநகராட்சி 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து பாதாள சாக்கடைகளிலும் பாதுகாப்பு கிரில் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. நீதிபதிகள் இந்த திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.
எளிமையான வழிமுறை
மேலும் நீதிபதிகள் இதுகுறித்து கூறுகையில், "ஒரு ஆண்டு காலம் என்பது மிகவும் நீண்டது. சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க ஒரே ஒரு பருவமழை போதுமானது. நாங்கள் எந்த அசம்பாவிதத்தையும் விரும்பவில்லை. இந்த பிரச்சினைக்கு எளிமையான மற்றும் தற்காலிக வழிமுறை எதுவும் இல்லையா?
நீங்கள்(மும்பை மாநகராட்சி) ஒரு விரிவான வழிமுறையை திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் பாதாள சாக்கடையில் விழுவதை தடுக்க எளிய முறை எதுவும் இல்லையா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மும்பை மாநகராட்சி வக்கீல் அனில் சாகரே 23-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.