தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்திய வங்கதேசத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கைது
மும்பை பாந்திரா பகுதியில் தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தியதாக வங்கதேசத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்
மும்பை,
பாந்திரா மேற்கு பகுதியில் பாபு ஹூசேன் சேக் (வயது40) என்ற ஆட்டோ டிரைவர் தடைசெய்யப்பட்ட ஐ.எம்.ஒ. செயலியை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தடைசெய்யப்பட்ட செயலியை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும் அவர் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பை வந்ததும் தெரியவந்தது. அவர் தாய், மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கொல்கத்தா எல்லை வழியாக மும்பை வந்து இருக்கிறார். அதே வழியாக கடந்த மாதம் வங்காளதேசத்துக்கு சென்றும் வந்து இருக்கிறார். அவர் தடை செய்யப்பட்ட செயலி மூலம் வங்காள தேசத்தில் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசி வந்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் யாருக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வருகிறார், ஓட்டுநர் உரிமம் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் சில செயலிகளை தகவலை பரிமாற பயன்படுத்துவதால் இந்திய அரசு ஐ.எம்.ஒ. உள்ளிட்ட 14 செயலிகளுக்கு தடைவிதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.