துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார் - கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை
துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார், கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார், கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சரத்பவார் பெயரை தவிர்த்த அஜித்பவார்
தேசியவாத காங்கிரஸ் கடந்த ஜூலை மாதம் 2 ஆக உடைந்தது. அந்த கட்சியை சேர்ந்த அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்-மந்திரியானார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரியானார்கள். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அஜித்பவாா் தங்கள் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளார். இதுதொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 100-வது நாளையொட்டி அஜித்பவார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னை தேசியவாத காங்கிரஸ் தலைவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்ததை நியாயப்படுத்தி உள்ளார். இதுதவிர சரத்பவாரின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து மராட்டியத்தின் முதலாவது முதல்-மந்திரி யஷ்வந்த் ராவ் சவானை தனது அரசியல் வழிகாட்டி என தெரிவித்து உள்ளார்.
அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலை வாயப்பு, சமூகத்தின் அனைத்து பிரிவின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் போன்றவை அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இதை நிறைவேற்றுவது தான் தேசியவாத காங்கிரசின் நோக்கம். விமர்சனம் என்பது எந்த ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையிலும் ஒரு அங்கம். நல்ல விமர்சனங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வேன். நேர்மறையான, வளர்ச்சி அரசியலில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தேசியவாத காங்கிரஸ் சத்ரபதி சிவாஜி, மகாத்மா புலே, சாகுமகாராஜ், அம்பேத்கர், யஷ்வந்த் ராவ் சவான் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு உள்ளது. எனது தலைமையில் கட்சி அவர்களின் கொள்கைப்படி செயல்படும். மராட்டிய அரசியல் வரலாற்றில் பல மூத்த தலைவர்கள் வேறுபட்ட அரசியல் நிலைபாட்டை எடுத்து உள்ளனர். ஒவ்வொறு அரசியல் தலைவரும் அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடு எடுப்பார்கள். அதேபோல தான் 2023-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி எனது தலைமையில் தேசியவாத காங்கிரஸ் முடிவு எடுத்தது. மக்களின் நலனுக்காக பணியாற்ற மாநிலத்தின் முதல்-மந்திரி என்னை பெரிதும் கவர்ந்தவராக உள்ளாா். தேசியவாத காங்கிரஸ் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பலதரப்பட்ட மக்களின் உரிமைகளை காக்க பணியாற்றி வருகிறது. 100 நாட்களாக அந்த பாதையில் பயணித்து வருகிறோம். அந்த பயணத்தை தொடருவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.