இந்திய குடியுரிமை பெற்றார், நடிகர் அக்ஷய் குமார்
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை பெற்றார்
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அக்ஷய் குமார். 55 வயதான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான '2.0' படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக நடித்து வரும் அக்ஷய் குமாருக்கு கடந்த 1990-ம் ஆண்டு தொடக்கம் சறுக்கலை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக வெளிநாட்டில் குடியேறும் எண்ணத்தில் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். இதனால் அவரது இந்திய குடியுரிமை ரத்தானது. இதனால் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்தநிலையில் 2019-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அக்ஷய் குமார், தான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்தார். ஆனால் கொரோனா காரணமாக அதை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சுதந்திர தினமான நேற்று இந்திய குடியுரிமை பெற்று உள்ளதற்கான சான்றிதழை சமூக வலைதள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இதயமும், குடியுரிமையும் இந்தியன்... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்மையில் இவர் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.