முககவசம் அணியாதவர்களிடம் எந்த சட்டவிதிகளின்படி அபராதம் வசூலிக்கப்பட்டது? - மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


முககவசம் அணியாதவர்களிடம் எந்த சட்டவிதிகளின்படி அபராதம் வசூலிக்கப்பட்டது? - மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Sept 2022 3:00 AM IST (Updated: 19 Sept 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

எந்த சட்டவிதிகளின்படி முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என விளக்கம் அளிக்க மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

எந்த சட்டவிதிகளின்படி முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என விளக்கம் அளிக்க மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அபராதம் வசூலுக்கு எதிராக மனு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மும்பையில் மாநகராட்சி பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தது. இந்தநிலையில் முகத்தை மூடினால் கொரோனா பரவாது என அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படாத நிலையில், முககவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத்தை திருப்பி கொடுக்க மாநில அரசு, மாநகராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்கி, மக்களுக்கு தடுப்பூசியை கட்டாயப்படுத்தி செலுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

விளக்கம் அளிக்க உத்தரவு

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி மாதவ் ஜாம்தார் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது நீதிபதிகள், எந்த சட்டவிதிகளின் அடிப்படையில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது என மும்பை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டனர். இதுதொடர்பாக அடுத்த விசாரணையில் விளக்கம் அளிக்க மாநகராட்சி வக்கீல் அனில் சகாரேவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் தலைமை நீதிபதி திபான்கர் தத்தா கூறுகையில், "நோய் பரவலை கட்டுபடுத்த முககவசம் கட்டாயம், முககவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவிப்பு பிறப்பித்து இருந்தால் நிச்சயமாக அது நல்ல நோக்கத்தோடு தான் இருந்து இருக்கும். அதில் கோர்ட்டு தலையிடாது" என்றார்.

மேலும் நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதையும் அடுத்த அமர்வில் சமர்பிக்க மாநகராட்சி தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அரசு வக்கீல் எதிர்ப்பு

முன்னதாக தடுப்பூசி விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருப்பதற்கு மாநில அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர், "கொரோனா தடுப்பூசி போடும் பணி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. எனவே அதில் தவறு இருக்காது. அது தான் சரி எனவும் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கூறியுள்ளது. எனவே வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியதாக உத்தவ் தாக்கரே மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.


Next Story