மலாடில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றவர் கைது
மலாடில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மலாடில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் பிடிபட்டார்
மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் நம்பர் 1-ம் பகுதியில் உள்ள கணபதி கோவில் அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் நடமாடி வருவதாக கடந்த 22-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் உமேஷ் குமார்(வயது32) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். அந்த நோட்டுகளை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது.
கள்ளநோட்டுகள் அச்சிட்டு வந்தவர்
இதையடுத்து போலீசார் குமாரின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கிருந்த கள்ளநோட்டுகள் அச்சிட்டு வந்த பிரிண்டர், 2 பென் டிரைவ்கள், 4 செல்போன்கள், லேப்டாப், காகிதங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். விசாரணையில், உமேஷ் குமார் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு அங்குள்ள சந்தையில் புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் இதில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.