13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ராய்காட் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ராய்காட்,
13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ராய்காட் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி கடத்தல்
ராய்காட் மாவட்டம் நாகோதானேவை சேர்ந்தவர் தியானேஷ்வர் (வயது35). அங்குள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி சென்றார். இதனால் சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். இறுதியில் பென் பகுதியில் தியானேஷ்வர் கடத்தி சென்ற சிறுமியுடன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
20 ஆண்டு கடுங்காவல்
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இதில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி 3 தடவை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் தியானேஷ்வர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.