எழுத்தாளர் கே.எஸ்.பகவான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
மைசூருவில் ஒக்கலிகர் குறித்து சர்ச்சை வகையில் பேசிய எழுத்தாளர் கே.எஸ். பகவான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
மைசூரு
மகிஷா தசரா
மைசூருவில் மகிஷா தசரா விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த தசரா விழாவை தலித் அமைப்பினர் கொண்டாடினர். விழாவில் எழுத்தாளர் கே.எஸ்.பகவான் பேசினார். அப்போது, நான் பல புத்தகங்களை படித்திருக்கிறேன்.
பல கதைகளை எழுதி இருக்கிறேன். கவிஞர் குவெம்பு எழுதிய புத்தகத்தில் ஒக்கலிகர்கள் அறிவு இல்லாதவர்கள் என கூறப்பட்டுள்ளது. இதுவரை குவெம்பு தெரிவித்ததை ஒக்கலிகர்கள் புரிந்து கொள்ளவில்லை. இனிமேலாவது அறிந்துகொள்ள வேண்டும்.
இது நான் கூறவில்லை. குவெம்பு சொல்லி உள்ளார். அதைத்தான் நான் சொல்கிறேன். இதை நான் நேரடியாக சொன்னால் என்னை கொன்று விடுவார்கள், என்றார். இதற்கு ஒக்கலிக சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
வீடு முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை குவெம்பு நகரில் உள்ள எழுத்தாளர் கே.எஸ். பகவான் வீட்டை ஒக்கலிக சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ஒக்கலிக சமூகத்தினரை புத்தி இல்லாதவர், அறிவுஇல்லாதவர், கலாசாரம் தெரியாதவர்கள் என எழுத்தாளர் கே.எஸ். பாஸ்கர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவரது பேச்சு இரு பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே போலீசார் கே.எஸ்.பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது போராட்டக்காரர்கள் கண்டன கே.எஸ். பாஸ்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.