உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டம்; 11 பேர் கைது
மங்களூருவில் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
மங்களூருவில் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
உலகக்கோப்பை
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தர்மசாலா, ஆமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதனை வைத்து சூதாட்டம் நடக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கிரிக்கெட் சூதாட்டத்்தை தடுக்க போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில், கடந்த 16-ந் தேதி இலங்கை- ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியை வைத்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் சூதாட்டம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கமிஷனர் தலைமையில் போலீசார் மங்களூரு நகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தசோதனையில் மூடபித்ரியை சேர்ந்த நவீத் (வயது30), உமேஷ் (40), பிரசாத் தேவடிகா (35), சுகேஷ் ஆச்சார்யா (33), புரந்தர குலால் (38), ஜெயந்த் பூஜாரி (41), தேவதாஸ் பூஜாரி (34), ரமேஷ் பூஜாரி (48) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடவடிக்கை
அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக மங்களூரு மாநகர் பகுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டம் அதிகரித்துள்ளதால் இதனை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கமிஷனர் அனுபவம் அகர்வால் தெரிவித்துள்ளார்.