சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்


சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டுள்ளதாக தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது மட்டுமின்றி உண்மையான ஜனதா தளம் (எஸ்) தங்களுடையது என்று அவர் பேசினார். இது அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, குமாரசாமிக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. சி.எம்.இப்ராகிமை நீக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனதா தளம் (எஸ்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமையில் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட எம்.எல்.ஏ.க்கள், முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கட்சிக்கு எதிராக பேசிய கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளோம். இதுகுறித்து எங்கள் கட்சியின் பிற மாநில நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி முடிவுக்கு கேரள மாநில எங்கள் கட்சியும் ஒப்புதல் வழங்கியுள்ளது. முஸ்லிம் நிர்வாகிகளும் எங்களுடன் தான் உள்ளனர். அதனால் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை.

வேறு வேறு மாநிலங்களில் வேறு மாதிரியான சூழ்நிலை உள்ளது. குமாரசாமி கட்சியின் சட்டசபை குழு தலைவர் பதவியுடன் கட்சியின் மாநில தலைவர் பதவியையும் நிர்வகிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story