சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்


சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும்  அபாயம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

சாலையோரம் வாகனம் நிறுத்தம்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன் பேட்டை உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படும். அதே நேரம் இந்த பகுதிகளில் சில சாலைகள் குறுகளாக காணப்பட்டு வருகிறது.

அந்த சாலைகளை விரிவுப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு நகரசபை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த சாலகைளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

அதன்படி ராபர்ட்சன் பேட்டையில் சுராஜ்மல் சர்க்கிள் பகுதியில் சாலையின் இருபுறமும் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வாகன நிறுத்தங்களால் சாலை விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே ராபர்ட்சன்பேட்டை போலீசார், தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை உடனே அகற்றுவதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலையை சீரமைக்கவேண்டும்

இதேபோல் ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் சாலைகள் பெயர்ந்து கிடப்பதாகவும், அதனை சீரமைக்கும்படியும் பொதுமக்கள் நகரசபை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் நகரசபை நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதையும் தடை செய்யவேண்டும். மீறி யாரேனும் நிறுத்தினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போலீசார் நடவடிக்கை

இதுகுறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ரெட்டி கூறுகையில், ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டையில் சாலையோரங்களில் வாகனம் நிறுத்துவது குறித்து புகார்கள் வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அபராதம் விதிப்பதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்க்கவேண்டும். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story