சிவமொக்கா தசராவையொட்டி யானைகளுக்கு பயிற்சி
சிவமொக்கா தசரா விழவையொட்டி நேற்று யானைகளுக்கு மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 24-ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது.
சிவமொக்கா:-
தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 24-ந் தேதி இந்த தசரா விழா ஜம்புசவாரி ஊர்வலத்துடன் நிறைவு பெறுகிறது. இந்த மைசூரு தசரா விழாவையொட்டி கர்நாடகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் தசரா விழா கொண்டாடப்படும். அதன்படி சிவமொக்கா மாவட்டத்திலும் கடந்த 16-ந் தேதி தசரா விழா தொடங்கியது. இந்த தசரா விழா வருகிற 24-ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் வெள்ளியால் ஆன சாமுண்டி அம்மன் சிலையை யானைகள் கம்பீரமாக சுமந்து செல்லும். இதற்காக 3 யானைகள் சக்கரேபைலு யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு தசரா மண்டலி சார்பில் நடைபயிற்சி மற்றும் பாரம் சுமக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி
அதன்படி நேற்று சிவமொக்கா நகரப்பகுதியில் யானைகளுக்கு மணல் மூட்டைசுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் 3 யானைகளும், சிவமொக்கா கோட்டை வாசலில் உள்ள மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டது. அங்கு யானைகளுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மணல் மூட்டையை சுமந்தப்படி ஊர்வலமாக சென்ற யானைகள், எஸ்.பி.எம்.சாலை, காந்தி பஜார், நேரு சாலை வழியாக சுதந்திர பூங்கா மைதானத்தை வந்தடைந்தது. இந்த மணல் மூட்டை சுமக்கும் பயிற்சியை தசரா யானைகள் வெற்றிகரமாக முடித்ததாக கூறப்படுகிறது. இந்த யானைகள் ஊர்வலத்தை அந்த பகுதி மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.