கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர்: குமாரசாமி குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கொள்ளையடிப்பது தினசரி தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார். பிறரின் நிலங்களுக்கு வேலி போட்டு தனதாக்கி கொள்கிறார். அவரது முறைகேடுகளுக்கு முடிவு இல்லையா? என்று மக்கள் கேட்கிறார்கள். முடிவு என்பது நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும். ஒரு வாக்கியம் இருந்தால் அதற்கு முற்றுப்புள்ளி இருந்தே தீர வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களின் செயல்கள் என்ன என்பது மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர். டி.கே.சிவக்குமார் நவீன கிழக்கிந்திய நிறுவனங்களின் அரசியல் ஏஜெண்டு. அவர் என்னை பற்றி தவறாக பேசுவதா?. இவர்களின் 'ஒய்.எஸ்.டி.', 'எஸ்.எஸ்.டி.' வசூலை பார்த்து ஜி.எஸ்.டி.யே பயந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி கமிஷன் பட்டாளம். இது தான் அவர்களின் ராஜதர்மம். கொள்ளை, முறைகேடு செய்வதே அவர்களின் உத்தரவாத திட்டங்கள். பிற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றால் காங்கிரசாருக்கு கர்நாடகம் தங்க சுரங்கமாக தெரிகிறது.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.