குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற குழந்தையை தேடிவந்த 'பாசக்கார தாய்


குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற குழந்தையை தேடிவந்த பாசக்கார தாய்
x

கொள்ளேகால் அருகே கணவர் பிரிந்து சென்றதால் வளர்க்க முடியாததால் குழந்தையை, அதன் தாய் வீசிச் சென்றார். அதைதொடர்ந்து அவர், குழந்தையை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளேகால்:

குப்பை தொட்டியில் குழந்தை

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மத்தேபுரா பஸ் நிலையம் அருகே உள்ள குப்பை தொட்டியில் நேற்று அதிகாலை பிறந்த 2 நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. இந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அதனை மீட்டு கொள்ளேகால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். விசாரணையில் குழந்தையை, அதன் தாய் வீசிச் சென்றது தெரியவந்தது. ஆனால் குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. இதற்கிடையே குழந்தையை வீசிச் சென்ற தாய், மீண்டும் குப்பை தொட்டிக்கு வந்து குழந்தையை பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், குழந்தையை போலீசார் மீட்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண், கொள்ளேகால் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம், நான்தான் குழந்தையின் தாய் என்று கூறினார். முதலில் சந்தேகம் அடைந்த போலீசார் பின்னர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினா்.

வளர்க்க முடியாததால்...

அப்போது அந்த பெண், இந்த குழந்தை எனக்கு கணவருக்கும் பிறந்தது. கணவர் என்னை விட்டு சென்று விட்டதால் குழந்தையை என்னால் வளர்க்க முடியாததால் குப்பையில் வீசி சென்றதாக கூறினார். மேலும் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள் நான், அதை பத்திரமாக பார்த்து கொள்வேன் என்றார். இதை ஏற்ற போலீசார் பெண்ணின் முகவரி மற்றும் பல்வேறு விவரங்களை பெற்று கொண்டு குழந்தையை கொடுத்து அனுப்பினர். மேலும் குழந்தையை வேறு எங்கு விற்பனை செய்தாலோ அல்லது தத்து கொடுக்க முயற்சித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story