மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை


மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை
x

மகனிடம் புலி நகத்துடன் கூடிய சங்கிலி இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த புலி நகத்தை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

பெலகாவி:-

மந்திரி மகனிடம் புலி நகம்?

கர்நாடகத்தில் புலி நகம், தோல் பயன்படுத்தும் விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. கன்னட நடிகர்கள், சாமியார்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் வனத்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருனாள் ஹெப்பால்கர், மருமகன் ராஜட் உல்லகட்டி ஆகியோர் புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்திருப்பது போன்ற படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வனத்துறையினர் சோதனை

இந்த நிலையில் நேற்று காலை பெலகாவியில் உள்ள மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வீட்டில் வனத்துறை துணை பாதுகாவலர் சங்கர் கல்லோலிகர், கூடுதல் வன பாதுகாவலர் சுரேஷ் டெலி தலைமையிலான வன அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலான மிருனாள் ஹெப்பால்கர் புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்தது பற்றி அதிகாரிகள் விசாரித்தனர்.

மேலும் அந்த சங்கிலியுடன் இருந்த புலி நக டாலரை பறிமுதல் செய்தனர். அது உண்மையான புலி நகமா என்பதை அறிய வனத்துறையினர் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

ஒப்படைத்து விட்டோம்

இதுகுறித்து மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் நேற்று பெலகாவியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகனிடம் புலி நகத்துடன் கூடிய சங்கிலி இருப்பதாக கூறுகிறார்கள். அந்த சங்கிலியை மகன் திருமணத்தின் போது ஒருவர் பரிசாக அளித்தது. அதில் இருப்பது உண்மையான புலி நகம் அல்ல. அது பிளாஸ்டிக்கால் ஆனது. சர்ச்சை ஏற்பட்டதால் அதனை வனத்துறையினரிடம் ஆய்வுக்காக ஒப்படைத்துவிட்டோம். புலி நமது தேசிய விலங்கு. புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் பொருட்களை யாராவது பயன்படுத்தினால் அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் மக்கள் மத்தியில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் தீவிர சைவ உணவு பிரியை. புலி, சிறுத்தை, மயில், மாடு, கோழி உள்ளிட்ட எந்த வகையான விலங்குகளையும் கொல்வதை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story