13 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


13 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 28 Oct 2023 12:15 AM IST (Updated: 28 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில் நடந்த விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு உறவினர்கள் கதறல்

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூரில் நடந்த விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி முன்பு திரண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

13 பேர் சாவு

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் அருகே சித்ராவதி பகுதியில் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ேகார விபத்தில் காரில் இருந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலம் கோரண்டலாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் தங்கி சலூன், ஆயத்த ஆடை, ெபயிண்டர் உள்ளிட்ட கூலி வேலை பார்த்து வந்தனர். தசராவுக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அவர்கள் பெங்களூருவுக்கு திரும்பி வந்தனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த அவர்களை, கார் டிரைவர் நரசிம்மப்பா, டிக்கெட் முறையில் பெங்களூருவுக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. 7 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த காரில், 13 பேரை ஏற்றி அழைத்து வந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் கடும் பனிமூட்டத்தால் சாலையோரம் நின்ற லாரி தெரியாமல் கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அத்துடன் டிரைவர் நரசிம்மப்பா தூக்கத்தில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கதறி அழுத உறவினர்கள்

இந்த நிலையில் விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் சிக்பள்ளாப்பூா் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து பற்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

மேலும் தங்கள் உறவினர்களை பறிகொடுத்த துக்கத்தில் ஆஸ்பத்திரியின் பிணவறை முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். விபத்தில் உயிரிழந்த நரசிம்மமூர்த்தியின் வயதான தந்தை, தனது மார்பில் அடித்து கொண்டு எனது மகன் போய்விட்டான், இனிமேல் நாங்கள் எங்கு செல்வோம் என்று கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் தேற்றினர்.

ராஜசேகரன் என்பவர் கூறுகையில், எனது தந்தை பெங்களூருவில் தனியார் பள்ளியில் காவலாளியாகவும், பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு நாங்கள் 2 மகன்கள். தசராவுக்கு ஊருக்கு வந்துவிட்டு திரும்பி வேலைக்கு வந்தனர். இனிமேல் அவர்களை பார்க்க முடியாதே என கதறி அழுதார்.

இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதும் அழுகுரலாக தான் கேட்டது. சிக்பள்ளாப்பூர் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ெசாந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் ரவீந்திரா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். அவர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பலியானவர்களின் உடல்கள் அந்த ஆம்புலன்சுகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story