ஊதுவர்த்தி தொழிற்சாலையில் பயங்கர 'தீ'
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா அருகே ஊதுவர்த்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனம் வெளியேறி வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 வாகனங்கள் எரிந்து நாசமானது.
பெங்களூரு:-
ஊதுவர்த்தி தொழிற்சாலையில் தீ
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோலூர் பாளையா அருகே பைப் லைன் ரோடு, 7-வது கிராசில் ஒரு ஊதுவர்த்தி தொழிற்சாலை உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அந்த தொழிற்சாலையில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென அங்கிருந்த பொருட்களுக்கும் பரவி எரிய தொடங்கியது. இதனால் தொழிற்சாலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. மேலும் ரசாயனம் இருந்த கேன்களிலும் தீப்பிடித்து எரிந்தது.
இதன் காரணமாக அந்த பிளாஸ்டிக் கேன்கள் வெடித்து சிதறியது. இதனால் கேன்களில் இருந்த ரசாயனம் வெளியேறி சாலைக்கு வந்தது. அப்போது அங்குள்ள வீடுகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களிலும் தீப்பிடித்தது. இதுபற்றி அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
8 வாகனங்கள் எரிந்து நாசம்
தீயணைப்பு படைவீரர்களின் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அதுபோல், வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டோ, 7 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள 2 வீடுகளும் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து சம்பவத்தில் ரவிக்குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்ததும் கே.பி.அக்ரஹாரா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் ஊதுவர்த்தி தொழிற்சாலையை நடத்தி வந்ததும், அந்த வீட்டை சுற்றி ஏராளமான வீடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மந்திரி பார்வையிட்டார்
மின்கசிவு காரணமாக ஊதுவர்த்தி தொழிற்சாலையில் தீப்பிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக தீவிபத்து நடந்த பகுதிக்கு சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் சென்றார்.
பின்னர் அந்த தொழிற்சாலையை அவர் பார்வையிட்டு, தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். ரசாயனம் வெளியேறி வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.