பெங்களூரு அருகே சூட்கேசில் இருந்து இளம்பெண் உடல் மீட்பு


பெங்களூரு அருகே சூட்கேசில் இருந்து இளம்பெண் உடல் மீட்பு
x

பெங்களூரு அருகே சூட்கேசில் இருந்து இளம்பெண் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே ஹொன்னேஹள்ளி கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையில் நேற்று காலை ஒரு சூட்கேஸ் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாபஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதற்குள் இளம்பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண்ணின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த இளம்பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. இளம்பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்து அவரது உடலை சூட்கேசில் வைத்து ஏரிக்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story