தமிழகத்திற்கு வினாடிக்கு 4,698 கன அடி நீர் செல்கிறது


தமிழகத்திற்கு வினாடிக்கு 4,698 கன அடி நீர் செல்கிறது
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மைசூரு:-

காவிரி மேலாண்மை ஆணையம்

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து வினாடிக்கு 3,698 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. 124.80 அடி உயர நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,682 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,276.11 அடியாக(கடல் மட்டத்தில் இருந்து) இருந்தது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284 அடி ஆகும். நேற்று காலையில் இந்த அணைக்கு வினாடிக்கு 2,064 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 4,698 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8,165 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. அது நேற்று அதிரடியாக வினாடிக்கு 4,698 கன அடியாக குறைக்கப்பட்டது.


Next Story