சுள்ளியா; விவசாயி வீட்டில் ரூ.20 லட்சம் நகை திருட்டு
சுள்ளியா அருகே விவசாயி வீட்டில் ரூ. 20 லட்சம் நகைகள் திருடப்பட்டது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு-
சுள்ளியா அருகே விவசாயி வீட்டில் ரூ. 20 லட்சம் திருடப்பட்டது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா யோருகுட்டே பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ்முத்யா. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில், மோகன் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில், இவர் நேற்றுமுன்தினம் மனைவியுடன் ஹாசனில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் மோகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடி சென்றனர். மறுநாள் மோகன் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனை பார்த்து மோகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோைவ மோகன் சோதனை செய்தார். அப்போது பீேராவில் வைக்கப்பட்டிருந்த 360 கிராம் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து, மோகன் சுள்ளியா போலீசுக்கு தகவல் ெதரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.