கிராமப்புறங்களில் மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை- ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவு
கிராமப்புறங்களில் மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு:
ஆலோசனை கூட்டம்
மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், கடந்த 3 மாதங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலால் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கடும் நடவடிக்கை
கிராமப்புறங்களில் சட்டவிரோத மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுபானங்களை குடித்து கிராமப்புறங்களில் ஏராளமானோர் மரணம் அடைந்து வருகிறார்கள். அப்பாவி மக்கள் மது அருந்தி செத்து வருகிறார்கள், அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
சட்டவிரோதமாக மது விற்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதுவும் தொடர்பு உள்ளதா?. கிராமப்புறங்களில் சட்டவிரோத மது விற்பனை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.