தரமற்ற விதை, உரம் விற்றால் கடும் நடவடிக்கை- விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் எச்சரிக்கை


தரமற்ற விதை, உரம் விற்றால் கடும் நடவடிக்கை- விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் எச்சரிக்கை
x

தரமற்ற விதை, உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைசூரு:

கடும் நடவடிக்கை

மைசூரு அருகே நாகனஹள்ளியில் விவசாய ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பல பகுதிகளில் தரமற்ற விதை மற்றும் உரம் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன. தரமற்ற விதை, உரம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற விதை, உரம் விற்பனை செய்யும் கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்படும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

ரூ.27 கோடி மதிப்பிலான...

கர்நாடகத்தில், ஆண்டுதோறும் சுமார் ரூ.22 ஆயிரம் கோடிக்கு விவசாய உபகரணங்கள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை நடக்கிறது. விவசாயிகளுக்கு தரமான விதை, உரம் கிடைக்காவிட்டால் ஒரு ஆண்டு வீணாகுவதுடன் அவர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு. அவர்களை ஏமாற்றக்கூடாது.

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் சுமார் ரூ.27 கோடி மதிப்பிலான தரமற்ற விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனை விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் அபராதம்

தரமற்ற உரம், விதைகள் விற்றதாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் 26 வழக்குகளில் ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தரமற்ற விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை விற்பனை செய்ததாக மாநிலத்தில் மொத்தம் 215 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தரமான விதைகளும், உரங்களும் வழங்க வேண்டும். இதில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story