முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ரூ.819 கோடி கடன் முறைகேடு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரமேஷ் ஜார்கிகோளிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை கூட்டுறவு வங்கிகளில் ரூ.819 கோடி கடன் பெற்று முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லட்சுமண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திருப்பி செலுத்தவில்லை
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா ஆட்சியை ஏற்படுத்தியவர் ரமேஷ் ஜார்கிகோளி. சவுபாக்கிய லட்சுமி சுகர் என்ற பெயரில் அவருக்கு சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. இதில் 6 பேர் இயக்குனர்களாக உள்ளனர். அதில் 4 பேர் அவரது குடும்ப உறுப்பினர்கள். மற்ற 2 பேர் அவரது பினாமிகள். அந்த சர்க்கரை நிறுவனம் மாநில அரசின் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ரூ.819 கோடி கடன் பெற்று முறைகேடு செய்துள்ளது.கடனை திருப்பி செலுத்தும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நோட்டீசு அனுப்பியது. தார்வாா் ஐகோர்ட்டு, கடன் தொகையில் 50 சதவீதத்தை திருப்பி செலுத்தும்படி அவருக்கு உத்தரவிட்டது. ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி கடனை திருப்பி செலுத்தவில்லை. சவுபாக்கிய லட்சுமி சுகர் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.900 கோடி. ஆனால் அதன் மதிப்பு ரூ.65 கோடி என்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை
அந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.60 கோடி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாங்கிய கடனை ரமேஷ் ஜார்கிகோளி திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து அமலாக்கத்துறை தான் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் மத்திய அரசின் கீழ் உள்ள அந்த விசாரணை அமைப்பு மவுனமாக இருப்பது ஏன்?. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.