பழுதடைந்த தெரு மின் விளக்குகள் சீரமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆண்டர்சன்பேட்ைட அருகே பாரதிபுரம் பகுதியில் பழுதடைந்து கிடந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
தெரு மின் விளக்குகள்
கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையை அடுத்த பாரதிபுரம் வார்டு எண் 33-ல் கடந்த சில மாதங்களாக தெரு மின் விளக்குகள் ஒளிராமல் கிடந்தது. இதனால் இரவு நேரங்களில் அந்த வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த தெரு மின் விளக்குகளை சீரமைக்கும்படி வார்டு கவுன்சிலர் சிவாஜிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் அவர் தெரு மின் விளக்குகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் சார்பில் நகரசபை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. நகரசபை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கவுன்சிலர் மற்றும் நகரசபைக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் பாரதிபுரம் வார்டு கவுன்சிலர் சிவாஜி, நகரசபை கமிஷனர் பவன்குமாரை நேரில் சந்தித்து தெரு மின் விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற அவர் தெரு மின் விளக்குகளை சீரமைப்பதாக கூறினார்.
எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தம்
அதன்படி நேற்று பாரதிபுரம் வார்டு பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளை சீரமைக்கும் பணிகள் நடந்தது.அதன்படி 150-க்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது. அப்போது பழைய தெரு மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒரு கோரிக்கைகளை அந்த பகுதி மக்கள் கவுன்சிலர் மற்றும் நகரசபை முன்பு வைத்துள்ளனர்.
அதாவது பாரதிநகர் பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறுகளை தோண்டி, தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற கவுன்சிலர் சிவாஜி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதற்கான பணிகள் உடனே நடைபெறும் என்று கூறினார்.