வட்டார வளர்ச்சி அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி: கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
வட்டார வளர்ச்சி அதிகாரியை பணி இடமாற்றம் செய்யக்கோரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் தங்கவயல்:
வட்டார வளர்ச்சி அதிகாரி
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா கெசரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி கெசரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி நாராயணப்பாவிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அவரும் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவரை பணி இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் உயர் அதிகாரிகளும் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
தாசில்தாரிடம் கோரிக்கை
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நேற்று கெசரனஹள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரி நாராயணப்பாவை உடனே இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.