தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருகிறார்-சித்தராமையா குற்றச்சாட்டு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருவதாகவும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
குஜராத் மாதிரி ஆட்சி
முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா விதான சவுதாவில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமராக மோடி பொறுப்பு ஏற்று 8 ஆண்டுகள் முடிந்து விட்டது. மோடியின் 8 ஆண்டு கால சாதனையை பா.ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் 8 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. ஐதராபாத்தில் பா.ஜனதாவின் தேசிய செயற்குழு
கூட்டம் நடக்கிறது. இந்த நேரத்தில் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை குறித்து புத்தகம் வெளியிட்டு உள்ளோம். 8 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்து விட்டது.
நாட்டில் நட்புரீதியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம் என்று பா.ஜனதாவினர் பொய் கூறி வருகின்றனர். பிரதமர் ஆகும் முன்பு குஜராத் மாதிரியில் ஆட்சி நடத்துவேன். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பேன். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவோம் என்று பல்வேறு உறுதிகளை மோடி அளித்து இருந்தார். ஆனால் அதில் இதுவரை ஒன்று கூட நிறைவேற்றவில்லை. மோடியை நம்பி கடந்த 2014-ம் ஆண்டு மக்கள் வாக்களித்தனர்.
தவறான பொருளாதார கொள்கை
ஆனால் அவரது தவறான கொள்கைகளால் ஏமாற்றம் அடைந்த மக்கள் அவரை புறக்கணிக்க முடிவு செய்தனர். ஆனால் புல்வாமா, பதன்கோட் தாக்குதல்களை வைத்து உணர்ச்சிபூர்வமாக பேசி அவர் மீண்டும் பிரதமர் ஆகிவிட்டார். நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை வேகமாக உயர்ந்து உள்ளது. மோடி பிரதமராக பொறுப்பு ஏற்ற போது குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தது.
தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்ளது. மக்கள் மீது வரிகளை தீட்டி வருகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு பற்றி தற்போது மோடி பேசுவது இல்லை. அவர் அதுபற்றி பேச வேண்டும். ஏழை மக்கள், தலித் மக்களுக்கு மோடி தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறார். மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் சுனாமி போல் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் கடன் 3 மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளை காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.