யானை தந்தம் கடத்தல் வழக்கில் தொடர்பு: பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-மேனகா காந்தி


யானை தந்தம் கடத்தல் வழக்கில் தொடர்பு:  பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-மேனகா காந்தி
x

யானை தந்தம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மேனகா காந்தி கடிதம் எழுதி அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.

ஹாசன்:

யானை தந்தம் கடத்தல் வழக்கு

ஹாசன் மாவட்டத்தில் சமீபகாலமாக காட்டுயானைகள் கொல்லப்பட்டு வந்தது. அதாவது காட்டுயானையை கொன்று தந்தம் வெட்டி கடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் வீராபுராவில் யானைகளை கொன்று தந்தம் கடத்தியவரை பெங்களூரு சி.கே. அச்சுகட்டு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே யானை தந்தம் கடத்தல் வழக்கில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.

மேனகா காந்தி கடிதம்

இந்த நிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கில் உடந்தையாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கும்படி வனவிலங்குகள் ஆர்வலரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகா காந்தி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ஹாசன் மாவட்டம் வீராபுராவில் யானையை கொன்று தந்தத்தை கடத்திய சந்திரகவுடா என்பவர் பெங்களூரு சி.கே அச்சுகட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சி.கே அச்சுகட்டு மற்றும் ஹாசன் வனத்துறை அதிகாரிகள் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை

இந்த வழக்கில் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்த முடியாத அளவிற்கு பிரஜ்வல் ரேவண்ணா அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும் வனத்துறை அதிகாரிகளை கொண்டு, சி.கே அச்சுகட்டு போலீசில் பதிவான வழக்கை ஹாசனுக்கு மாற்றும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் யானை தந்தம் கடத்தல் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாசன் வனத்துறை அதிகாரிகளும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு உதவியாகவுள்ளனர்.

இந்த வழக்கில் எதற்காக அவர் தலையிடுகிறார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுத்து யானை தந்தம் கடத்தல் வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story