சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்


சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்
x

முல்பாகல் அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன. இதனால் கிராம மக்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலார் தங்கவயல்:

4 ஆடுகள் செத்தன

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வாலிகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக 20 ஆடுகளை வளர்த்து வந்தார். சுப்பிரமணி தினமும் தனது ஆடுகளை அங்குள்ள அஞ்சநாத்ரி மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இதேபோல், நேற்றும் சுப்பிரமணி தனது ஆடுகளை அஞ்சநாத்ரி மலையில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அவர் அங்குள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று 4 ஆடுகளை வேட்டையாடி கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இந்த நிலையில் ஆடுகள் மேய்ச்சலுக்கு விட்ட இடத்துக்கு வந்த சுப்பிரமணி, சிறுத்தை தாக்கி ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கிராம மக்கள் சாலை மறியல்

இதுபற்றி வாலிகுண்டே கிராமம் முழுவதும் தகவல் பரவியது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தால் பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு எதிராக ஆக்‌ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணி மற்றும் வாலிகுண்டே கிராம மக்கள், சிறுத்தை தாக்கி செத்த 4 ஆடுகளுடன் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது வனத்துறையினர் வந்து தங்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்று கூறினர்.

வனத்துறை அதிகாரிகள் உறுதி

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், அஞ்சாநாத்ரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் போராட்டத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.


Next Story