பணம் பெற்று கொண்டு அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம்; குமாரசாமி வேண்டுகோள்
பணம் பெற்று கொண்டு அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் என குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு ஹெப்பாலில் நடந்த ஜனதா மித்ரா நிகழ்ச்சியில் குமாரசாமி பேசுகையில் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் ராஜகால்வாய்களை பணக்காரர்கள் ஆக்கிரமித்து அதன் மீது வீடுகள் கட்டி உள்ளனர். அந்த வீடுகளை இடித்து அகற்றுவதை விட்டுவிட்டு ஏழைகள் அமைத்த குடிசைகளை பி.டி.ஏ. அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து உள்ளனர். ஏழைகள் வசிக்கும் பகுதி மோசமான நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மந்திரியான கட்டா சுப்பிரமணிய நாயுடு, பெண்களுக்கு அரிசி, குங்குமம் தருவதாகவும், பூஜை நடத்துவதாகவும் கூறி வெற்றி பெறுவார்.
வெற்றி பெற்றதும் அரசு நிலத்தை அபகரித்து விட்டு ஜாமீன் கேட்டு கோர்ட்டு வாசலில் நிற்பார். பெங்களூருவில் உள்ள பல அரசியல்வாதிகள் ஏழைகளின் நிலங்களை சூறையாடி பல நூறு கோடி சம்பாதித்து உள்ளனர். அந்த பாவப்பட்ட பணத்தை தேர்தலின் போது மக்களுக்கு லஞ்சமாக கொடுத்து வெற்றி பெறுவார்கள். இத்தகைய சூழ்ச்சியில் மக்கள் சிக்க கூடாது. பணம் பெற்று கொண்டு அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.