பட்டாசு வெடி விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் இந்த வெடி விபத்து சம்பவத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
அத்திப்பள்ளி:-
பட்டாசு வெடி விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி பட்டாசு குடோனுடன் கூடிய பட்டாசு கடைக்கு வாகனங்களில் வந்த பட்டாசுகளை இறக்கும் பணி நடந்தது. அந்த சமயத்தில் பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கல்லூரிகளில் படித்து வந்த நிலையில் தற்காலிக வேலைக்கு வந்த வாலிபர்கள் 14 பேர் பலியானார்கள். மேலும் தீக்காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிரிழந்தனர். அதாவது கடந்த 11-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தினேசும், கடந்த 12-ந்தேதி பெங்களூருவை சேர்ந்த ஆணழகனான வெங்கடேசும் உயிரிழந்தனர்.
சி.ஐ.டி. விசாரணை
மேலும் இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வெடிவிபத்து குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதித்யா பிஸ்வாஸ் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஒரு வாலிபர் சாவு
இந்த நிலையில் அத்திப்பள்ளி வெடிவிபத்தில் சிக்கி ராஜேஷ் (வயது 20) என்ற வாலிபர் படுகாயம் அடைந்து இருந்தார். அவர் செயின்ட் ஜான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பலியான ராஜேஷ் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, வெள்ளை குட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் என்பதும், இவர் வெடி விபத்து நடந்த பட்டாசு கடைக்கு வேலைக்கு வந்திருந்ததும், வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
ராஜேஷ் உயிரிழந்ததை தொடர்ந்து அத்திப்பள்ளி வெடிவிபத்து சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவரை தவிர மற்ற அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.