தசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி


தசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

மைசூரு:

தசரா விழாவையொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

தசரா விழா

மைசூரு தசரா விழா இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தசரா விழாவையொட்டி மலர்கண்காட்சி, மாணவர்களுக்கு மாநில அளவிலான யோகா போட்டி, சைக்கிள் பேரணி, பழங்கால கார் கண்காட்சி, விவசாய தசரா உள்பட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண மைசூருவை நோக்கி கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

அவர்கள் மைசூரு நகரை சுற்றி பார்த்து இரவு நேரங்களில் ஜொலிக்கும் மின்விளக்குகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் அரண்மனை, மைசூருவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்கிறார்கள். இந்தநிலையில் நேற்று தசரா விழாவையொட்டி மைசூரு மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. இந்த யோகா பயிற்சி நிகழ்ச்சிக்கு சிறை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

இந்த யோகா பயிற்சியை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில், 200-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். பின்னர் சிறை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் பேசுகையில், கைதிகளுக்கு முன்பெல்லாம் சிறைச்சாலையில் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இப்போது அப்படி எல்லாம் இல்லாமல் கைதிகளின் மனநிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நல்ல கருத்துகளை தெரிவித்து நல்ல பயிற்சி கொடுப்பது தான் கைதிகளுக்கு தண்டனை. ஆரோக்கியம் என்பது தானாக வருவதில்லை. அதற்கு நிர்வாகம் அவசியம். தன்னுடைய தேகம் மற்றும் மனசை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தான் யோகாசனம் செய்ய வேண்டும். அதனால் தான் தசரா விழாவை யொட்டி சிறைக்கைதிகளுக்கு யோகானம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறை சாலைகள், கைதிகளுக்கு தண்டனை வழங்குவதில்லை.

மனம் மாற்றுதல்

அதற்கு பதிலாக அவரது மனம் மாற்றுதல் செய்து கொள்வதற்கு அவகாசம் செய்து கொடுத்துள்ளது. சமூகத்தில் அமைதி நிலை காக்கும் வகையில் சிறைச்சாலைகள் வேலைகளை செய்து வருகிறது. சிறை கைதிகள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மனம் மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் விடுதலை ஆகி வெளியே சென்ற போது செய்த குற்றத்தை மறந்து மறுவாழ்க்கை வாழ வேண்டும்.

சிறை கைதிகளுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனை தரும் வகையில் தண்டனை வழங்குவதில்லை. அவர்களுக்கு நல்ல கருத்துகளை தெரிவித்து அவர்கள் தாங்களாகவே மனம் மாற வேண்டும். அந்த வகையில் சிறைச்சாலையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

ஆடல்-பாடல்

மைசூரு நகர் முழுவதும் மக்கள் சந்தோசமாக தசரா பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். அதேப்போல் சிறைச்சாலையில் கைதிகள் தசரா விழாவை ஆடல்- பாடலுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

------------------------------------------------------


Next Story