கர்நாடக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்க புதிய குழு அமைப்பு


கர்நாடக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்க புதிய குழு அமைப்பு
x

கர்நாடக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்க பல்கலைக்கழக மானிய குழுவின் முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிபுணர்கள் 23 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

புதிய குழு அமைப்பு

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி உள்ளது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ்அரசு அமைந்திருப்பதால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மறுத்து விட்டது.

அதே நேரத்தில் கர்நாடக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கர்நாடகத்திற்காக புதிய கல்வி கொள்கையை உருவாக்க பல்கலைக்கழக மானிய குழுவின் (யூ.ஜி.சி) முன்னாள் தலைவர் தலைமையில் தனிக்குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

23 கல்வி நிபுணர்கள்

பல்கலைக்கழக மானிய குழுவின் முன்னாள் தலைவரான சுக்தேவ் தலைமையில் தான் அந்த குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் மொத்தம் 23 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் 23 பேரும் கல்வி நிபுணர்கள் ஆவார்கள். அந்த குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்ட சில கல்வி நிபுணர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க அரசு புதிய குழுவை உருவாக்கி இருக்கிறது. இந்த குழுவினர் மாணவ, மாணவிகளின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கல்வி கொள்கையை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story