சரகூரு அருகே:கால்வாய்க்குள் கார் பாய்ந்தது; 2 வக்கீல்கள் நீரில் மூழ்கி பலி


சரகூரு அருகே:கால்வாய்க்குள் கார் பாய்ந்தது; 2 வக்கீல்கள் நீரில் மூழ்கி பலி
x

சரகூரு அருகே கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் 2 வக்கீல்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

மைசூரு:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கால்வாய்க்குள் கார் பாய்ந்தது

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா உண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 50), நிலுவாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரேஸ் (40), மலலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (40). இவர்கள் 3 பேரும் வக்கீல்கள் ஆவர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று உன்சூரில் இருந்து கபினி அணைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சரகூரு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அந்த கார், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

2 பேர் சாவு

இதனால் காரில் இருந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து கால்வாய்க்குள் பாய்ந்த காரில் சிக்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களில் அசோக்கை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்ற 2 பேரையும் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சரகூரு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், தண்ணீரில் காருடன் அடித்து செல்லப்பட்ட தினேஷ் மற்றும் கிரேசை தேடினர்.

இந்த நிலையில் சிறிது தூரத்தில் அவர்கள் 2 பேரையும் பிணமாக தீயணைப்பு படையினர் மீட்டனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன் உதவியுடன் கால்வாயில் கிடந்த காரும் மீட்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சரகூரு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரசாத், இன்ஸ்பெக்டர் பசவராஜ் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story