கும்கி யானையின் வாலை அறுத்த மர்மநபர்கள்
சிக்கமகளூருவில் கும்கி யானையின் வாலை அறுத்து காயப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவமொக்கா:-
கும்கி யானை
சிவமொக்கா தாலுகா சக்ரேபயலுவில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பானுமதி என்ற கும்கி யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை நிறைமாத கர்ப்பமாக உள்ளது. இதனால் பாகன்கள் அந்த யானையை காட்டு பகுதியில் சுதந்திரமாக விட்டனர். இந்தநிையில் நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு சென்ற பானுமதி யானை திரும்ப வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பாகன்கள்,அந்த யானையை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது தரையில் ரத்த கரைகள் கிடந்தது. இதை பார்த்த பாகன்கள் யானை குட்டியை ஈன்றிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அந்த ரத்தக்கரை இடத்தை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது யானையின் வால் பகுதியில் காயம் இருந்தது. இதை பார்த்த பாகன்கள் உடனே வனத்துறை கால்நடை டாக்டர்களுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் யானையின் வால் பகுதியை பரிசோதனை செய்தனர். அப்போது மர்மநபர்கள் யானையின் வால் பகுதியை கத்தியால் அறுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானையை முகாமிற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சக்ரேபயலு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரி பிரசன்னா என்பவர் கூறுகையில், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் யானையின் வாலை அறுத்துள்ளனர். தற்போது அந்த யானையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 7 தையல் போடப்பட்டுள்ளது. விரைவில் அந்த யானை குணமடைந்துவிடும். இந்த வெறிச்செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.