கர்நாடகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


கர்நாடகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

கர்நாடகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

ஊட்டச்சத்து குறைபாடு

ஒரு தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிறப்பு வசதிகள் குறித்த மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது. அதாவது 1,000 குழந்தைகளுக்கு 20 என்ற கணக்கில் இறப்பு விகிதம் உள்ளது. அதை 10-க்கும் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிரசவத்தின் போது தாய் மரணம் அடைவது குறைய வேண்டும். 4, 5 மாவட்டங்களில் தாய் இறப்பு சற்று அதிகமாக இருப்பதால் தாய் மரண விகிதம் அதிகமாக உள்ளது. அதனால் மாநிலத்திலேயே வளர்ச்சியை நோக்கும் தாலுகாக்களை அடையாளம் கண்டு கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை தளர்த்தி அங்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதாரத்திற்கு நிதி

கர்நாடகத்தில் வளர்ச்சி குறைவாக உள்ள 5 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தைகள் நல நிபுணர்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும். பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் நலனில் நாங்கள் அதிக அக்கறை செலுத்துகிறோம். வறுமையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நமது பொறுப்புகள்

கிராமங்களில் உள்ள இளைஞர்களும் திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில் அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. சுகாதாரத்துறையில் நமக்கு எழும் சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். தாய் கருவறையில் இருந்து பூமிக்குள் செல்லும் வரையிலான நமது பயணத்தில் நமது பொறுப்புகளை நாம் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

மனித உருவாக்கம் என்பது அற்புதமானது. இதில் குழந்தைகள் நல நிபுணர்களின் பங்கு முக்கியமானது. கர்ப்பிணி பெண்களின் சுகாதாரத்தை பேணி காப்பது நமது பொறுப்பு. கர்ப்பிணி பெண் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் பலமான, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். அறிவியல் பூர்வமாக அதிகாரிகள் குழு நம்மிடம் உள்ளது. வளர்ச்சி சிந்தனையுடன் அரசு செயல்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story