காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்


காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
x

காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தண்ணீர் திறப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ெபாய்த்து போனதால், அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் எதிர்க்கட்சிகளும் மாநில அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.

46-வது நாளாக...

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியா டவுன் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் கடந்த 45 நாட்களாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் 46-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

கடலை ெபாரி பாக்யா

மேலும் விவசாய சங்கத்தினரும் காவிரி நீர் பாதுகாப்பு குழுவுக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்துள்ளது, தற்போது 6-வது உத்தரவாத திட்டமாக விவசாயிகளுக்கு 'கடலை பொரி பாக்யா' திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது என கூறி கடலை பொரியை சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் வரும் நாட்களில் மாணவ-மாணவிகள், பல்வேறு அமைப்பினர் காவிரி நீர் பாதுகாப்பு குழுவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


Next Story