ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலம்


ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலம்
x

தசரா விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்புசவாரி ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இந்த ஊர்வலத்தை மகாராணி பிரமோதா தேவி தொடங்கி வைத்தார்.

மண்டியா:

தசரா விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்புசவாரி ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இந்த ஊர்வலத்தை மகாராணி பிரமோதா தேவி தொடங்கி வைத்தார்.

தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நவராத்திரியையொட்டி கர்நாடகத்தில் பல பகுதிகளில் தசரா விழா நடந்து வருகிறது. மைசூருவுக்கு அடுத்தப்படியாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தான் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்காலத்தில் யது வம்ச மன்னர்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவை தலைமையிடமாக கொண்டு தான் தசரா விழாவை கொண்டாடி வந்தனர். அதன்பிறகு வந்த உடையார் மன்னர்கள் காலத்தில் மைசூருவை தலைமையிடமாக கொண்டு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது மைசூருவில் அரசு சார்பில் பெரிய அளவில் தசரா விழா நடக்கிறது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 நாட்கள் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கப்பட்டணாவில்...

இந்த நிலையில் மைசூருவில் நேற்று முன்தினம் தசரா விழா தொடங்கிய நிலையில், நேற்று ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா தொடங்கியது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி தசரா விழாவை தொடங்கி வைத்தார். இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக, மைசூருவுக்கு வந்த மகேந்திரா, விஜயா, வரலட்சுமி ஆகிய 3 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நேற்று ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் வைத்து 3 யானைகளுக்கும் ரமேஷ் பண்டிசித்தேகவுடா எம்.எல்.ஏ. சிறப்பு பூஜை செய்து வரவேற்றார். இந்த விழாவில் கலெக்டர் குமார், போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டார். இதையடுத்து கோவில் வளாகத்தில் யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்கு தேவையான வெல்லம், கரும்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜம்புசவாரி ஊர்வலம்

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா தொடங்கியதும், பாரம்பரிய விழா மற்றும் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மின்விளக்கு அலங்காரத்தை மந்திரி செலுவராயசாமி தொடங்கி வைத்தார். இதனால் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவையொட்டி நேற்று ஜம்புசவாரி ஊர்வலம் எனப்படும் யானைகள் ஊர்வலம் நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் அம்பாரியை சுமந்து கொண்டு மகேந்திரா யானை மேடை அருகே வந்தது. அப்போது மகாராணி பிரமோதா தேவி, மந்திரி செலுவராயசாமி ஆகியோர், மலர்தூவி ஜம்புசவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

கண்கவர் கலை நிகழ்ச்சி

இதையடுத்து அம்பாரியை சுமந்துகொண்டு மகேந்திரா யானை கம்பீர நடைபோட்டு செல்ல, அதனை தொ டர்ந்து வரலட்சுமி, விஜயா யானைகள் சென்றன. அதனை தொடர்ந்து கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போலீஸ் பேண்ட், குதிரைப்படை, டொல்லு குனிதா ஆகியவை சென்றன. மேலும் கலை குழுவினர் ஆடிப்பாடியபடி யானையின் பின்னால் சென்றனர். அதனை தொடர்ந்து அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமணத்தை ஒழிக்கும் விதமான அலங்கார வண்டி பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பல்வேறு துறை சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்து சென்றன. இதில் ஏராளமான மக்கள் திரண்டு, ஜம்பு சவாரி ஊர்வலம் மற்றும் கலை குழுவினரின் நிகழ்ச்சி, அலங்கார வண்டிகளின் அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.

பலத்த பாதுகாப்பு

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் குமார், போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த தசரா விழாவையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தசரா விழாவையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.


Next Story