வரலாற்று ஆதாரத்துடன் மகிஷா தசரா நடத்தப்படும்; தலித் சங்கத்தினர் அறிவிப்பு
வரலாற்று ஆதாரத்துடன் மகிஷா தசரா விழா கொண்டாடப்படும் என தலித் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மைசூரு:-
மகிஷா தசரா
மைசூருவில் தசரா பண்டிகைக்கு முன்னதாகவே மகிஷா தசரா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை தலித் அமைப்பினர் கொண்டாடி வருகிறார்கள். வருகிற 13-ந் தேதி சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா கொண்டாடப்படும் என ஏற்கனவே தலித் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்தநிலையில், இதற்கு மைசூரு- குடகு மாவட்ட எம்.பி. பிரதாப் சிம்ஹா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விழா நடைபெறும் அதே நாளில் இந்து அமைப்பினர் சாமுண்டி மலையில் ஊர்வலம் நடத்துவதாகவும், மகிஷா தசராவை நடத்த விட மாட்டோம் எனவும் பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறினார்.
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியது. மேலும் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா நடத்தப்படும். யார் தடுத்தாலும் விழா நடக்கும் என தலித் அமைப்பினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மைசூருவில் கூட்டாக பேட்டியளிக்கையில் கூறியதாவது:- வருகிற 13 -ந்தேதி மகிஷா தசரா விழா கொண்டாட வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.
சிலைக்கு மாலை அணிவிப்பு
அந்தநாளில் சாமுண்டி மலையில் உள்ள மகிஷாசூரனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு டவுன்ஹால் வரை ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். பா. ஜனதா, இந்து அமைப்பினர் மகிஷாசூரன் பண்டிகையை கொண்டாட விடமாட்டோம் என கூறி வருகிறார்கள். யார் தடுத்தாலும் மகிஷா தசரா வரலாற்று ஆதாரத்துடன் நடைபெறுவது உறுதி.
மாநில அரசு மகிஷாசூரன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி தராவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தலித் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள், என்றனர். முன்னதாக மகிஷா தசரா விழாவிற்கான நோட்டீசை தலித் அமைப்பினர் வெளியிட்டனர்.